சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 8) பிற்பகல் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்ற பிரதமர், சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை - கோவை வந்தே பாரத்: புதன்கிழமையை தவிர வாரத்தின் பிற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம்-செங்கோட்டை: இந்நிலையில் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில் செல்கிறது.
வாரம் தோறும் ஞாயிறன்று தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக வாரம் தோறும் திங்கள்கிழமை, செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6.05க்கு தாம்பரம் வந்து சேரும். மே 29ம் தேதி வரை இந்த ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படும். ஜூன் 1ம் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளிலும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விரைவு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் ஏசி 2ம் அடுக்கு 2 பெட்டிகள், ஏசி 3ம் அடுக்கு 5 பெட்டி, படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு 5 பெட்டிகள், முன்பதிவு இல்லா பெட்டிகள் 3 இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் டெல்டா மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி: இதற்கிடையே, திருத்துறைப்பூண்டி -அகஸ்தியம்பள்ளி இடையே 37 கிலோ மீட்டர் அகல ரயில் பாதையில் புதிய ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 7.40க்கு அகஸ்தியம்பள்ளியை சென்றடையும். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்படும் ரயில், மாலை 4.25க்கு அகஸ்திம்பள்ளியை அடையும்.
இதேபோல் அகஸ்தியம்பள்ளியில் இருந்து காலை 7.55-க்கு புறப்பட்டு, காலை 8.50க்கு திருத்துறைப்பூண்டியை சென்றடையும். மாலை 4.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்படும் ரயில், மாலை 5.35க்கு திருத்துறைப்பூண்டியை சென்றடையும். கரியப்பட்டினம், குருவாபுலம், நெய்விளக்கு, தோப்புத்துறை, வேதாரண்யம் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.