சென்னை: சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு, வசந்த் அன் கோ நிறுவனத்தை வெற்றிகரமான முறையில் நடத்திவருவதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதற்காகவும், விருது வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது போன்று பல சாதனைகள் படைத்த பெண்களுக்கும், சேவைகள் செய்து வரும் பெண்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
எந்நேரமும் உதவிகள்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குறித்தும், அவரது துணைவியார் குறித்தும் பேசினார்.
அதில், “வசந்த குமாரிடம் கட்சி நிகழ்ச்சிக்காக பத்து ரூபாய் வாங்குவது என்பது கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றது. கட்சி நிகழ்ச்சி வருகிறது என்றால் இரண்டு மூன்று நாட்கள் நான் அவரிடம் பேச வேண்டியிருக்கும். ஆனால் அவரது துணைவியார் அப்படி இல்லை கட்சிக்காக எந்நேரமும் உதவிகளை வழங்கி வருகிறார்.
இந்த முறை ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவன் வந்தபோது 90 விழுக்காடு செலவுகளை தமிழ்செல்வி ஏற்றுக்கொண்டார். மேலும் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கும் விஜய்வசந்த், முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்தார்” என தெரிவித்தார்.
‘கொடுக்கல் வாங்கல் தான் அரசியல்’
இதையடுத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலை பார்வையாளர் என்கிற இடத்தில் இருக்கிறது. பார்வையாளர்கள் என்பவர் எதையும் பேராசையாக பார்ப்பவர்கள் அவ்வளவு தான். நாம் பார்வையாளர்களாக இருக்க கூடாது, பங்கேற்பாளர்கள் ஆக இருக்க வேண்டும்.
ஒன்றை பெறுவதும் மற்றொன்றை கொடுப்பதிலும் தான் அரசியல் இருக்கிறது. நம்மிடம் கொடுப்பவர்கள் நீங்கள் எத்தனை சதவீதம் வாக்கு வைத்திருக்கிறீர்கள் என்று தான் கேட்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தால் கண்டிப்பாக விமர்சனம் எழும், இதுதான் எதார்த்தம்.
ஆட்டோ ஓட்டுனரை நாம் மேயராக கொண்டு வந்துள்ளோம். நமக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நாம் எத்தனை இடத்தில் வெற்றிக் கண்டோம் என்பது முக்கியம். வெற்றி பெறவில்லை என்றால், அதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் நாமும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. அதற்கு நமது செயல்பாடுகள் தான் முக்கியம். மற்ற கட்சிகளை விட நாம் நமது பகுதியில் அதிக வாக்குகள் வாங்க, மகிளா காங்கிரஸார் முயற்சி செய்ய வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக மகளிர் தின கொண்டாட்டம்: சசிகாலவுக்கு 'விஷ்' பண்ணாத வளர்மதி