சென்னை: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று (அக்.26) சென்னை வந்தடைந்தார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற திரௌபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரவு விருந்து அளிக்கிறார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் நாளை முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்: காவல் துறை மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
இதன் பின்னர், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் 9:00 முதல் 9:30 மணியளவில் மிகப் பிரம்மாண்டமாக நடக்க உள்ள 8வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் மத்தியில் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சேனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாகூர் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், மதியம் 12:00 மணியளவில் திரௌபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் டெல்லிக்கு வழியனுப்பி வைக்க உள்ளனர். பின்னர், அவருக்கான தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படிங்க: ஆளுநர் ரவியுடன் காவல் ஆணையர் சந்திப்பு.. தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு பணிகள்!
இதனிடையே, ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறிய நிலையில், ஆளுநர் மாளிகைக்கு குடியரசு தலைவர் வருகையால் கூடுதல் பாதுபாப்பு பணியில் ஏராளமான போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனையொட்டி, சென்னை மாநகரில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மதம், சாதி ரீதியாக பிரிந்துள்ள நாம் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைக்க வேண்டும்' - ஆளுநர் ஆர்.என்.ரவி