சென்னை: முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (செப்.16) தொடங்கவிருந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததன் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டாயிரத்து 207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஏற்கனவே ஒருமுறை வெளியிடப்பட்டு அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக செப்.9ஆம் தேதி இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
2ஆவது முறையாக நிறுத்தம்
அதன்படி இன்று (செப்.16) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான தேர்வு நவம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பார்வை மாற்றுத் திறனாளிகள் தேர்வெழுத உதவியாளர் ஒருவர் நியமனம் செய்வதுடன், தேர்வெழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அமல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பில் வெளியிடாததை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முந்தைய உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காத நிலையில், தேர்வு நடைமுறைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என நேற்று (செப்.15) உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக இன்று தொடங்கவிருந்த இருந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்காமல் தேர்வு கூடாது’