சென்னை: தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியின் வாட்ஸ் அப்பிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் ஆபாச வீடியோக்கள் அனுப்பியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். எனினும் 3 மாதங்கள் ஆன நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து வீரலட்சுமி இரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், காவல் துறையினர் ஆபாச வீடியோ அனுப்பியவரை கைது செய்யவில்லை என்றால், தாங்களே அவர்களைப் பிடித்து பல்லாவரம் சந்தையில் கட்டிப்போடுவதாக கூறியிருந்தார். பின்னர், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.
ஆபாச வீடியோக்கள் அனுப்பியவர் கைது
மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து மீண்டும் அவர் புகார் கொடுத்தார். இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் டிரில்லிங் மெஷின் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வரும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (38) என்பவரை சங்கர் நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.
கைதானவரின் வாக்குமூலம்
அவரிடம் நடத்திய விசாரணையில், “முகநூல் மூலம் வீரலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் பெண் என்பதால் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோக்களை அனுப்பினேன். ஆனால், சில நாள்களில் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாக வாட்ஸ் அப்பில் அவர் எனக்கு செய்தி அனுப்பியிருந்தார்.
அதற்கு பிறகு நான் செல்போனை அணைத்து வைத்து விட்டேன். மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நான் முகநூல் மூலம் தூது விட்டு தற்போது சிக்கிக் கொண்டேன்” என வாக்குமூலம் கொடுத்தார்.
காவல் துறைக்கு கேள்வி
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், இன்று (ஜூலை 21) காலை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஆனால், அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வீரலட்சுமி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆபாச படம் அனுப்பியவரைக் கைதுசெய்க... இல்லையெனில் அது அறுக்கப்படும் - மிரட்டல் காணொலி