சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்ட முன் வடிவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சட்ட முன் வடிவை அமல்படுத்தக் கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு சட்டபேரவைக் கூட்டத் தொடரில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 எனும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறுவுவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்த சட்டத்தின்படி 100 ஹெக்டேருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலைகள் இருந்தால், அந்த இடத்தில் வணிகம், தொழில்துறை, சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அரசு திருப்தியடையும் பட்சத்தில் எந்த ஒரு திட்டத்தையும் சிறப்புத் திட்டமாக அறிவிக்கலாம்.
நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு, நீரோட்டம் குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் விண்ணப்பித்தால் அதனைப் பரிசீலிக்க அரசு ஒரு நிபுணர் குழுவை அறிவித்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும். திட்டங்களுக்கான விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான அதிகாரம் இச்சட்டத்தில் எங்கும் கிடையாது.
ஒட்டுமொத்த மசோதாவிலும் அரசு ஒரு நீர்நிலையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் வரும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என இச்சட்டம் கூறுகிறது.
நீர்நிலைகள் மீதும் மேய்ச்சல் மற்றும் பொது நிலங்களின் மீதும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் இருக்கின்ற உரிமையை முற்றிலுமாக பறிக்கும் அம்சங்களை இந்த சட்டம் கொண்டுள்ளது.
இச்சட்டத்தால் பரந்தூர் விமான நிலையம் போன்ற பெரிய திட்டங்களுக்கு திட்ட அமைவிடத்தில் நீர்நிலைகளை கொண்டிருந்தாலும் நிலம் கையகப்படுத்துவது மிகச் சுலபமானதாகிவிடும். அப்படி நடந்தால் விமான நிலையம் உருவான பிறகு அதை ஒன்றிய அரசு அதானி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் என்பதை நாங்கள் கூறித் தெரிய வேண்டியதில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய எத்தனையோ மசோதாக்களை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்திய ஆளுநர், சட்டப்பேரவையில் எவ்வித விவாதமுமின்றி அறிமுகம் செய்யப்பட்ட நாள் அன்றே நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றால் இத்திட்டம் யாருக்கு பலனிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள், சூழல் அமைப்புகள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். நிலம், நீர் நிலைகள் மீது கிராம, உள்ளாட்சி அமைப்ப்புகளுக்கு இருக்கும் உரிமையினையும், அவற்றைப் பாதுகாக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சட்டங்களையும் தீர்ப்புகளையும் நீர்த்துப்போகச் செய்யும் நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023ஐ தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது” என அதில் கூறியுள்ளளனர்.
இதையும் படிங்க: காலம் தாழ்த்தப்படும் நடிகை சித்ராவின் மரணம் விவகாரம்: ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!