சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரே காம்பவுண்டில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பை தண்ணீர், கால்வாய், லிப்ட், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் தனியார் கட்டுமான நிறுவனமான அமர்பிரகாஷ் நிறுவனம் இதுநாள் வரை பராமரித்து வந்தது.
இந்நிலையில், குடியிருப்பில் உள்ள ஒருதரப்பினர் பராமரிப்பு செய்து வந்த நிர்வாகத்தை மாற்ற ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் குடியிருப்பில் வந்த குடிதண்ணீர், லிப்ட் வசதி போன்றவை கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குடியிருப்பும் சுகாதரமற்ற நிலைக்கு மாறியுள்ளது. தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரியும், எதிர்தரப்பை கண்டித்தும் குடியிருப்பு வாசிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்ற பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.