சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிச.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, “பொறியியல் கல்லூரியில் இப்போதுதான் முதல் முறையாக தமிழை பாடமாக அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த ஆண்டு முதல் தமிழ் பாடம் நடத்தப்படும். தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடமாக நடத்தப்படும். ஏற்கனவே உள்ள தமிழ் ஆசிரியர்களை பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம். இன்னும் புதிதாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
முழு நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். தமிழில் படித்த தமிழ் ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் யுஜிசி தகுதி பெற்றவர்கள் மட்டுமே, இதில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடம் நடத்தப்படும். வெளிநாட்டு மாணவர்களும் திராவிட மாடல் ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்தப்படும். தமிழ் ஆசிரியர்களை கொண்டே இரண்டு பாடங்களும் நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் நடத்தப்படும். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு ஒன்றரை ஆண்டுகள் தாமதம் என கருதுகிறேன். உதயநிதி ஸ்டாலின் திறமை பெற்ற இளைஞர். எல்லாத் துறைகளிலும் திறமை மிக்கவர். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிற இளைஞராக உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுவார்.
இதைவிட வருங்காலத்தில் இன்னும் அதிகமான பொறுப்புகளை ஏற்று உதயநிதி செயல்படுவார். வாரிசு அரசியல் குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல. எந்த கட்சியை எடுத்துக் கொண்டாலும் 10 சதவீத வாரிசு அரசியல் என்பது சகஜம்தான். அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புணர்வு.
அனைவரும் இணைந்து செயலாற்றுவோம். தமிழ் மொழி கல்வியில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். உதயநிதி சீக்கிரம் துணை முதலமைச்சர் ஆவார் என நானும் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்