பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
மாணவர்கள் பொதுத் தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் பரிக்சா பெ சர்ச்சா 2020 நிகழ்ச்சியின் மூலம் பாரத பிரதமர் பள்ளி மாணவர்களுடன் ஜனவரி 16ஆம் தேதி புதுடில்லியிலுள்ள மைதானத்தில் உரையாற்ற உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி புதுடெல்லியில் பிரதமர் மோடியின் உரை தூர்தர்ஷன் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதமந்திரியின் இணையதளங்கள் தவிர்த்து, யூடியூப், பேஸ்புக் உள்ளிட்டவையின் மூலமாகவும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏறக்குறைய அனைத்து வகை பள்ளிகளும் தொலைக்காட்சி சாதனம், மின் இணைப்பு வசதி பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் வகையிலும் கேட்கும் வகையிலும் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் இதர சாதனங்கள் பழுது நீக்கம் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மேலும், அன்றைய நாள் முழுவதும் மின்விநியோகம் பெறும் வகையில் ஜெனரேட்டர், இன்வெட்டர் வசதி செய்துகொள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட நிதியினை பயன்படுத்தலாம். அனைத்துப் பள்ளி மாணவர்களும் தவறாமல் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காண்பது, கேட்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகையும் 15ஆம் தேதி பொங்கலும் 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப்பொங்கலும் 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16ஆம் தேதி பிரதமரின் பேச்சைக் கேட்பதற்கு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கான பொங்கல் விடுமுறை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!