கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும், ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பூவிருந்தவல்லியில் இருந்து சென்னைக்கு பச்சையப்பன் கல்லூரி வழியாக செல்லும் அரசு பஸ்களில் செல்லும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட உள்ளதாகவும், ரூட்டு தல பிரச்சினை இருந்ததாகவும் தகவல் வந்தது.
இதையடுத்து பூவிருதவல்லி பஸ் நிலையங்களில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுவதற்காக கூட்டமாக நின்று பேசியுள்ளனர். இதுதொடர்பான தகவல் தெரிந்ததும் காவல் துறையினர் அங்கு விரைந்தனர்.
காவல் துறையினரை கண்டதும் அங்கிருந்து மாணவர்கள் மற்றொரு பஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர், அங்கு வந்த பூவிருந்தவல்லி காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்து அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி பரிசோதனை செய்தார்.
மேலும் அவர், 'பூவிருந்தவல்லியில் இருந்து பச்சையப்பன் கல்லூரி வழியாக சென்னை நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகளில் பஸ் தினம் கொண்டாட கூடாது, ரூட்டு தல பிரச்சினை ஏதும் செய்ய கூடாது.
நாம் படிப்பதற்காக கல்லூரிக்கு செல்கிறோம், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடமும் நோட்டு, புத்தகங்கள் ஏதும் கிடையாது படிக்கும் காலங்களில் போலீஸ் வழக்குகளில் சிக்கிக் கொண்டால் மூட்டை தூக்கும் வேலைக்கு கூட செல்ல முடியாது. முறையாக படித்து கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்' என அறிவுரை வழங்கினார். பின்னர் மாணவர்களை ஒன்றாக அரசு பஸ்களில் அனுப்பாமல் மூன்று, மூன்று பேராக அரசு பஸ்களில் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததார்.