தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்துவிட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடைவிதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் நிலை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. இந்த இரு வழக்குகளும், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன், சுங்கக்கட்டண வசூல் விதிகளின்படி, சுங்கச்சாவடி அமைக்க ஏற்பட்ட மூலதனச் செலவு முழுவதும் வசூலிக்கும் வரை சாலையைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் கட்சிக் கொடிகளுடன் வரும் வாகனங்களுக்கும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்காமல் செல்ல அனுமதிப்பதால்தான் சுங்கச்சாவடி அமைக்க ஏற்பட்ட மூலதனச் செலவை வசூலிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
தாம்பரம் – திண்டிவனம் இடையே சாலை அமைக்க பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், திட்டம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது தான் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகளை முறையாகப் பராமரிப்பது குறித்தும் சாலைகளில் பள்ளங்களை மூடாமல் மீண்டும் சாலையைப் போடுவது குறித்தும் வரும் மார்ச் 23ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் காஞ்சிபுரம் பிரிவு அலுவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து வசூலிப்பீர்களா? - நீதிபதிகள் கேள்வி