சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நூதன முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் சாலையோரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டுக்கொண்டிருந்த சமையலாளரிடம், 'நான் ஒரு தோசை சுடலாமா?' எனக் கூறி தோசை ஒன்றை ஊற்றினார்.
பரப்புரை வாகனங்கள் தவிர்ப்பு
இதே போன்று அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியான குஷ்பூ, பாஜக வேட்பாளர்களுடன் கடை ஒன்றில் நுழைந்து தேநீர் தயாரித்து அருந்தினார். இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சென்னை மந்தைவெளியில் தேர்தல் பரப்புரை வாகனத்தில் செல்லாமல், சாலையோரத்தில் நடந்துசென்று வாக்குச் சேகரித்தார்.

அப்போது அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடத்தில் அவர் வாக்குச் சேகரித்தார். தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது வேட்பாளர்களை ஆதரித்து சென்னை யானைக்கவுனி தெருவில் நடந்துசென்று வீடு, வீடாக முரசு சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பெரும்பாலும் அதிமுக, திமுக, நாம் தமிழர், பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்தத் தலைவர்கள் இந்த நூதன பரப்புரையில் ஈடுபடவில்லை. சுயேச்சை வேட்பாளர்களே நூதன பரப்புரையில் பெரிதும் களமிறங்கியுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வாக்காளர்களுக்கு இளநீர், புத்தகங்களை வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்காளர்கள் தெளிவு
கரோனா பரவல் அதிகரித்துவருவதைக் கருத்தில்கொண்டு, வாக்காளர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கி விழிப்புணர்வுடன் கூடிய வாக்குச் சேகரிப்பிலும் பலர் ஈடுபட்டனர்.

இது குறித்து அரசியல் விமர்சகர் அ. மார்க்ஸ் பேசுகையில், "தேர்தல் காலங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்குகள் சேகரிப்பது புதிதல்ல. எவ்வாறு வாக்குகள் சேகரித்தாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் வாக்காளர்கள் தற்போது தெளிவாக உள்ளனர்.
இது உள்ளாட்சித் தேர்தல் என்பதால், உள்ளூர் வேட்பாளர்களே தேர்தலைச் சந்திப்பர். ஆகையால் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலைவிட, உள்ளாட்சித் தேர்தலில் நூதன முறை வாக்குச் சேகரிப்பு சற்று அதிகமாகவே இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'காவல் துறையினரின் வாகனங்களிலேயே திமுக பணப்பட்டுவாடா...!'