திருச்சி சமத்துவபுரத்தின் அருகேயுள்ள பெரியாரின் சிலையில் நேற்று(செப் 26) நள்ளிரவு காவி நிறம் பூசப்பட்டது. இதுகுறித்து பலதரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது இதுகுறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது குறித்துமு.க ஸ்டாலின் கூறுகையில், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்? திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.