சென்னை: ஆவடி எஸ்.எம். நகர் காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் சீனிவாசன்(32). காவல்துறையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தீபிகா(6) என்ற மகள் உள்ளார்.
சீனிவாசனுக்கு திருமணத்திற்கு முன்பே கடன் பிரச்சினை அதிகமாக இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் நேற்றிரவு 7 மணிக்கு பணி முடித்துவிட்டு புதுப்பேட்டையில், உள்ள ஒரு கடையில் எலி மருந்தை வாங்கிவந்து அண்ணா நகர் நியூ ஆவடி ரோடு விஜயஸ்ரீ கல்யாண மண்டபம் அருகில் நின்று குடித்துள்ளார்.
பின்னர் விஷம் குடித்த விஷயத்தை நண்பரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஐசிஎப் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
''எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன”
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060