சென்னை: அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் கோரா புட்ஸ் என்கிற காம்ப்ளக்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. அதில் காமதேனு ரோஸ் மில்க் என்ற பெயரில் ரோஸ் மில்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த கடைக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்துள்ளது. அவர்கள் கடையில் ரோஸ் மில்க் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்டர் செய்த ரோஸ் மில்க் எடுத்து வருவதற்குத் தாமதமானதால் போதையிலிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடையின் காசாளர் கணேசன் என்பவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஐந்து நபர்களும் கணேசனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், அந்த நபர்கள் காசாளர் அறைக்குச் சென்று அவரை அடித்து, முகத்தில் குத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த காசாளருக்கு ரத்தம் கொட்டியது. பின்னர் அங்கிருந்தவர்கள், அந்த கும்பலைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளைக் கொண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் இருப்பவர்களின் அடையாளத்தை வைத்து போலீசார் அந்த ஐந்து பேர் கொண்ட கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் குற்றப் பின்னணி உடையவர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடையின் காசாளர் அறைக்குள் புகுந்து ஐந்து பேர் கொண்ட கும்பல் காசாளர் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கெத்து காட்ட நினைத்த இளைஞர்கள்... கொத்தாக தூக்கிய காவல்துறை!