சென்னை பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் பலசரக்குக் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் நேற்று (ஜூன் 9) மாலை 5 மணியளவில் அடைக்கப்பட்டன.
இன்று (ஜூன் 10) காலை 7 மணியளவில், தனது பலசரக்கு கடையைத் திறக்க வந்த மணிமாறன், கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தக் கடைக்கு அருகில் இருந்து இரு கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக மணிமாறன், மேகலிங்கம் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்குள்ள அனைத்து சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.