சென்னை: கடந்த சட்டப்பேரவை நடைபெறும்போது காவல் துறைக்குப் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அடிப்படையில் காவலர்களின் முக்கியமான கோரிக்கையாக தங்களுக்கு அரசு அளிக்கும் குடியிருப்பின் வீட்டின் பரப்பளவை அதிகப்படுத்தி வீடுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காவலர்கள் முன்வைத்தனர்.
ஆயுதப்படை, தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் வரை பதவிக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில், தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக் கழகத்தில் கொடுக்கப்படும் வீட்டின், பரப்பளவை அதிகப்படுத்தி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பரப்பளவை அதிகரித்து அரசாணை
காவலர்களுக்கு 650 சதுர அடியில் இருந்து 750 சதுர அடியாகவும், உதவி ஆய்வாளர் 724 சதுர அடியில் இருந்து 850 சதுர அடியாகவும், ஆய்வாளர்களுக்கு 843 சதுர அடியில் இருந்து 1,000 சதுர அடி ஆகவும், துணை கண்காணிப்பாளர்களுக்கு 1273 சதுர அடியில் இருந்து 1,500 சதுர அடியாகவும், வீட்டின் பரப்பளவை உயர்த்தி, அதற்கு ஏற்றவாறு தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி குடியிருப்பில் வீடு வழங்கப்படும் எனக்குறிப்பிட்டு, இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.