சென்னை: மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், சென்னையில் உள்ள கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகும் போதே ஆர்த்தி சேலையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்து வந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் கல்லூரியில் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார்கள் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவதாக கணவர் விக்னேஷிடம் கூறிவிட்டு, கடந்த 3ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கணவர் விக்னேஷ், ஆர்த்தியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. உடனடியாக அவர் கல்லூரிக்குச் சென்று ஆர்த்தியை தேடியுள்ளார். எங்கு தேடியும் ஆர்த்தி கிடைக்காததால் வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆர்த்தி வீட்டை விட்டு செல்லும்போது, வீட்டில் இருந்த 80 சவரன் நகையுடன் வெளியேறியது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த விக்னேஷ் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், பெண்ணை காணவில்லை என வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி, ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரியவந்தது. உடனடியாக ஆகாஷ் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றிருக்கின்றனர். ஆனால், ஆகாஷின் வீடு பூட்டியிருந்துள்ளது. அவரது பெற்றோர் உள்பட யாரும் அங்கு இல்லை என்பது உறுதியானது.
தொடர்ந்து, ஆகாஷின் செல்போனுக்கு காவல் துறையினர் அழைப்பு விடுத்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் ஆர்த்தியும், ஆகாஷும் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் காதல்; பள்ளி மாணவியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த இளைஞர் கைது