சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச் சாலை புளியமரம் பேருந்து நிறுத்தத்தில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இங்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்காணிப்புக் கேமராவின் மூலம் கண்காணித்த ஹைதராபாத்திலுள்ள வங்கியின் தலைமை அலுவலகர்கள் உடனடியாக சென்னை, முகப்பேரிலுள்ள வங்கி அலுவலர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு திருட்டு சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து,ரோந்து பணியிலிருந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவல் துறையினரின் வருவதற்கு முன்பே திருடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், இயந்திரத்தை ஆய்வு செய்ததில் பணம் திருட முயற்சி செய்து பாதியில் விட்டுச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு திருடனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.