சென்னை சூளைமேடு செளராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. பானுமதிக்கு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து பானுமதி சாலைக்கு வந்து ஆட்டோவிற்காக நிற்கும் போது பிரசவ வலி மேலும் அதிகரிக்கவே சாலையில் சரிந்து விழுந்து விட்டார்.
அதேநேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சூளைமேடு காவல் ஆய்வாளர் சித்ரா, பானுமதி சாலையில் விழுந்து கிடைப்பதை பார்த்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முயன்றார்.
ஆனால் அதற்குள் பிரசவலி அதிகமாகவே தனது ஜீப்பில் வைத்து ஒட்டுநர் பெண் காவலரும் சித்தராவும் பிரசவம் பார்த்தனர். இதில் பானுமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் தாய் சேய் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின் பானுமதி குறித்து அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் வந்தனர்.
மருத்துவமனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசவவலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாதூர்யமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த காவல் ஆய்வாளர் சித்ராவை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.