சென்னை: வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் (வயது 18) மற்றும் ஜீவன் (வயது 21). இதில் பிரசாந்த் கோபாலபுரத்தில் தங்கி ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும், ஜீவன் பூந்தமல்லியில் தங்கி ஓட்டலிலும் வேலை செய்து வருகின்றனர். நேற்றிரவு ஜீவன் பூந்தமல்லியில் இருந்து பிரசாந்தை பார்க்க ராயப்பேட்டைக்கு வந்து உள்ளார். பின்னர் இருவரும் வெளியே சென்று விட்டு, இரவு அண்ணா சாலை சர்ச் பார்க் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் பிரசாந்த் மற்றும் ஜீவனிடம் தங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், எங்களிடம் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு செல்போன் இருப்பதாகவும், 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி பிரசாந்த், ஜீவன் இருவரும் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்களது செல்போனை கொடுத்து இரண்டு போன்களை வாங்கி உள்ளனர்.
அந்த நபர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேகமாக புறப்பட்டுச் சென்ற பின்னர், இருவரும் அந்த செல்போனை ஆன் செய்த போது அது போலி போன் என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக இது குறித்து அருகில் உள்ள ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இரு நபர்கள், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அதனை அடுத்து போலீசார் உடனடியாக இரு நபர்கள் இருவரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது நதீம் (வயது 35), காலீத் ஹனீபா (வயது 32) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் கடந்த 28ஆம் தேதி சென்னைக்கு வந்து அறை எடுத்து தங்கி, இதே போன்று போலி கிரானைட் கல், போலி செல்போன்களை ஏமாற்றி விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அது மட்டுமின்றி ஏமாற்றி பெற்ற செல்போன்களை மொத்தமாக டெல்லிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
இதனை அடுத்து ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் இருவரிடமும் இருந்து பணம் மற்றும் செல்போன் முதலியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி - பணத்தை இழந்த பெண்கள் கண்ணீர்மல்க பேச்சு!..