சென்னை: பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் வெல்டிங் மெஷினால் கடையை ஓட்டைப்போட்டுக் கடந்த 9ஆம் தேதி இரவு ஒரு கும்பல் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. மேலும் நகைக்கடையிலிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளைச் சேமித்து வைக்கும் டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறை சாவடி அருகே நடைபெற்ற இக்கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நகைக்கடை சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதால் பொலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் தப்பி சென்ற காரின் பதிவெண் போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து பல மாநிலங்களுக்குச் சென்ற தனிப்படை போலீசார், இதே போல ஓட்டைப்போட்டுக் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களைப் பிடித்தும், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்களை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மங்கி குல்லா அணிந்த கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகளும் சமீபத்தில் வெளியானது.
இருந்த போதிலும் கடந்த 17 நாட்களாக கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் கொள்ளையடிக்கக் கடந்த 9ஆம் தேதி கொள்ளையர்கள் வரும் போது திருத்தணி அருகே இரு கொள்ளையர்கள் நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
குறிப்பாக பெரம்பூர் நகைக்கடை முதல் ஆந்திரா மாநிலம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் அடையாளங்களை வைத்து கொள்ளையர்கள் சித்தூரில் இருந்து கடந்த 9ஆம் தேதி சென்னைக்குள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது திருத்தணி அருகே உள்ள உணவு கடையில் கொள்ளையர்கள் நடந்து சென்ற புகைப்படங்கள் போலீசாருக்கு சிக்கி உள்ளது. கர்நாடக கொள்ளையர்கள் போல இருப்பதால் அனைத்து மாநில போலீசாரிடமும் சென்னை தனிப்படை போலீசார் உதவியை நாடி உள்ளனர். மேலும் ஒரு தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். கொள்ளையர்களின் இரு புகைப்படங்களையும் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டம்மி துப்பாக்கியுடன் திருநங்கையிடம் சில்மிஷம்.. யூடியூபர்ஸ் கைது!