சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், காணும் பொங்கல் பண்டிகையான நேற்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பம் குடும்பமாக வந்து கடற்கரையை சுற்றிப் பார்த்து, குடும்பமாக அமர்ந்து உணவு அருந்திவிட்டு, விளையாடி காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை ஆகிய இடங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் வரும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் கடலில் இறங்காத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடற்கரை முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் மப்டியிலும், டிரோன்களை பயன்படுத்தியும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால், உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகளை குழந்தைகளின் கைகளில் கட்டி, அனைவரையும் கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, அதிக அளவில் மெரினாவில் மக்கள் வருவார்கள் என்பதால், இன்று மட்டும் 3 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக அளவில் மெரினாவில் மக்கள் கூட்டம் வந்துள்ளது. அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை மணற்பரப்பில் காவல் உதவி மையங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் யாராவது காணாமல் போனால், அவர்கள் கையில் கட்டப்பட்டுள்ள அடையாள அட்டைகளை வைத்து, விரைவாக மீட்டுக் கொடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் சுமார் 13 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களையும், குற்றச் சம்பவங்கள் எதுவும் நிகழ்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல், போக்குவரத்து காவல்துறை சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலை முதல் மாலை வரை மட்டும் மெரினா கடற்கரை கூட்டத்தில் காணாமல் போன 13 சிறுவர் சிறுமிகளை கையில் கட்டப்பட்டுள்ள அடையாள அட்டைகளை வைத்து, 20 நிமிடங்களில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
மேலும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், போலீசார் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர், குடும்பமாக கடற்கரைக்கு வந்து காணும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தோம் என தெரிவித்தனர். சிலர் வெகு தூரத்தில் இருந்து வந்தும் கடலில் கால் கூட நினைக்க முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றோம் எனவும் தெரிவித்தனர்.