சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர், சத்யா (32). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று (ஜூலை 18) அதிகாலை சத்தியா வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சத்யாவைப் பின் தொடர்ந்து ஒருவர் சென்றுள்ளார்.
அவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறிக்க முயன்றார். ஆனால், சத்யா சுதாரித்துக் கொண்டு விலகிக் கொண்டார். பின்னர், அந்த இளைஞரைப் பார்த்தபோது எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து சென்றுள்ளார். சற்று நேரத்தில் மீண்டும் அந்த இளைஞர் சத்யாவின் செயினைப் பறிக்க, அவரைப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். உடனே முகப்பேர் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரோந்து காவலர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.
உடனே ஜே.ஜே. நகர் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் பார்த்திபன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் செயினை பறிக்க முயன்ற நபரை நோக்கிச் சென்றனர். காவல் துறையினரை கண்டதும் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய அந்த நபரை சுமார் 1 கி.மீ., தூரம் வரை காவல் துறையினர் துரத்திச் சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுப்பு என்கிற சுப்பிரமணி (24) என்பதும், இவர் மீது திருமங்கலத்தில் 5 வழக்குகளும், கொரட்டூரில் ஒரு வழக்கும் உள்ளது தெரியவந்தது. குறிப்பாக இவர் திறந்து கிடக்கும் வீடுகளில் நுழைந்து செல்போன் திருடுவது, வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இருசக்கர வாகனங்களைத் திருடுவது, செயின் பறிப்பது போன்ற குற்றச்சம்பவங்களில் சுப்பிரமணி ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், நேற்று (ஜூலை 18) அதிகாலை நேரம் தனியாக சென்ற சத்யாவிடம் செயினைப் பறிக்க முயன்றுள்ளார். அப்போது, சத்யா சுதாரித்துக்கொண்டதால் விடாமல் மீண்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று செயினை பறிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, குற்றவாளி சுப்பிரமணி பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்போது, பெண்ணிடம் செயினை பறிக்க முற்பட்டு தப்பிச்சென்ற இளைஞரை ஒரு கி.மீ., தூரம் வரை காவல் துறையினர் துரத்திச் சென்று குற்றவாளியைப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சினிமா காட்சியைப் போல காவலர்கள் துரத்திச் சென்று பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் மோதல்.. பழங்குடியின இளைஞர் மீது தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம்! 6 பேர் கைது!