சென்னை: காஞ்சிபுரம் பெரும்பாக்கம் பகுதியைச்சேர்ந்தவர் சுதாகரன் (30). சமையல்காரரான இவர் ஒப்பந்த முறையில் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று சமையல் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகின்றார். நேற்று (ஜூன் 23) நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்ற சுதாகரன் அங்கு சமையல் வேலையினை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குச்செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்றார்.
நள்ளிரவு ஆனதால் ஊருக்குச்செல்ல பேருந்து கிடைக்காத சூழலில் சுதாகரன் 6ஆவது நடைமேடையிலேயே படுத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அதிகாலை சுமார் 3 மணியளவில் இளம்பெண் ஒருவர் சுதாகரனை எழுப்பி, ஆசை வார்த்தைக் கூறி அழைத்துள்ளார். பின்னர் அந்தப் பெண், சுதாகரனை செங்கல்பட்டு பரனூர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு காத்திருந்த 3 ஆண்களுடன் சேர்ந்து சுதாகரனை அடித்து, உதைத்து அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த சுதாகரன் இச்சம்பவம் குறித்து சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து இளம்பெண், மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்புத்தந்தை: 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!