சென்னையின் முக்கிய கடைவீதிப் பகுதிகளான தியாகராய நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், கோயம்பேடு போன்ற இடங்களில் தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் குவிகின்றனர்.
இக்கூட்ட நெரிசலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திருட முயலும் கொள்ளையர்களை, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் கண்காணிப்பில் காவல் துறையினர்
குறிப்பாக தியாகராய நகரில் செயின் பறிப்பைத் தடுக்க, கழுத்தில் துணி அணிந்து செல்லும் படியும், உடமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே வருகின்றனர். மேலும் பொருத்தப்பட்டிருக்கும் 150 கண்காணிப்பு கேமரக்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பூக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட என்.எஸ்.சி போஸ் சாலை, குடோன் தெரு, பந்தன் தெரு, கோவிந்த நாயக்கன் தெரு போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் நகைகள், பழங்கள், துணிமணிகள் வாங்க குவிவதால், குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக ட்ரோன் கேமரா மூலமாக காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பார்க்கிங்கில் மீறி நிற்கும் வாகனங்கள், அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்கள், குற்றங்கள் நடந்தவுடன் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏதுவாக ட்ரோனை பயன்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என மொத்தம் 100 காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி ஒதுக்கிய இடங்களில் இருசக்கர வாகன பார்க்கிங் அமைத்திருப்பதாகவும், நடைபாதைக் கடைகளை அமைக்க தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களைக் கண்காணித்து அபராதத்தொகைப் பெற்று வருவதாகவும், ஒரு நாளைக்கு 250 வழக்குகள் வரை பதிவு செய்வதாகவும் பூக்கடை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டத்தினருக்கு தென்னக ரயில்வேயின் தீபாவளி பரிசு!