சென்னை: சென்னை விமான நிலையத்தில் வரும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது என விமான நிலைய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இரண்டு முறை சென்னை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் மீது இது போன்று லேசர் ஒளி அடிக்கப்படுவதால், விமானத்தை இயக்குவதில் விமானிக்குச் சிரமம் ஏற்படும் எனவும், இதனால், கவனம் சிதறுதல், ரேடாரில் குழப்பம், வியூ புள்ளியில் தற்கால தடை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சில நேரங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் கூட ஏற்பட்டு விடலாம் எனத் தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், லேசர் ஒளி அடிக்கப்படும் சம்பவங்களால் விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்குக் கேள்விக் குறியாகி உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரங்கிமலை வழியாகத் தரையிறங்கும் உள்நாட்டு விமானங்கள், மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மீது கத்திப்பாரா மேம்பாலம், ஒலிம்பியா சந்திப்பு, பெசன்ட் நகர், அடையாறு, கோட்டூர்புரம் மற்றும் திருமுடிவாக்கத்தில் இருந்து, மர்ம நபர்களால் 'லேசர்' ஒளி அடிக்கப்படுவதாக விமான பைலட்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள விமான நிலைய அதிகாரிகள், இந்த குற்றச்செயல், மழைநேரங்களில் மட்டும் நடப்பதாகவும் விளக்கம் அளித்து உள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதைத் தடுக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 350இல் இருந்து 400 விமானங்கள் வரை இயக்கப்படும் நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
விமான போக்குவரத்தில் பிரதானமாக விளங்கும் சென்னை விமான நிலையம், விமானங்கள் மற்றும் விமான பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, துபாய், குவைத், சார்ஜா, அபுதாபி, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 51 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் அந்த நாடுகளிலிருந்து 51 வருகை விமானங்களும் என மொத்தம் 102 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோஹா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளன.
மேலும் பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், கல்ப் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் படிப்படியாக புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு!