இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது.அதே நாளில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம் செய்த நிலையில், ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. சட்டம் இயற்றப்பட்டு 45 நாள்களாகியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசு இப்போது தன்னிச்சையாக அரசாணை பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; ஆனால், ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்து வருவதால் நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்று போய்விடக்கூடும்; இத்தகைய சுழலில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இவ்வாறு செய்திருப்பதாக அறிய முடிகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, கொள்கை முடிவு எடுத்து இந்த அரசாணையை பிறப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குபிடிக்குமா? என்பது தெரியவில்லை.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள் இன்று வரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வேளை கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, உச்சநீதிமன்றத்திற்கு சென்று நிலைமையை விளக்கிக் கூறி கூடுதல் அவகாசத்தைப் பெற முடியும். அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தான் சரியாக இருக்கும்.
இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
7.5% உள் இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழ்நாடு ஆளுநர் தான். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுநர் தரப்பில் கூறப்படும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.
இனியும் இந்த சிக்கலை தீவிரப்படுத்தாமல் இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்'