இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. ஆனால், இதுவரை அவசரச் சட்டத்தை ஆளுநர் பிறப்பிக்கவில்லை. சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தேவையின்றி தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. இந்த நிலையை மாற்றி சமூக, கல்வி அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசரச் சட்டத்தை ஜூன் 15ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக அவசரச் சட்டம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் அவசியம். அரசுப் பள்ளி மாணவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி. தமிழ்நாடு அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுநர் துணையாக இருக்க வேண்டுமே தவிர, தேவையற்ற தாமதம் செய்து தடையாக இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிட வேண்டும். அதற்கு வசதியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.