இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள நான்காயிரத்து 700க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும், அவற்றின் கிளைகளிலும் நகைக்கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் உழவர்கள் கைகளில் பணப்புழக்கமின்றி, தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் கடன் பெறுவதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் மூடப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
அமைப்பு சாரா தொழில்துறையினர் ஊரடங்கால் சொல்ல முடியாத துயரை அடைந்துள்ளனர். இவர்கள் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பேருதவியாக திகழ்வது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் நகைக்கடன்கள் தான்.
தமிழ்நாடு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் நகைக்கடன் உள்ளிட்ட புதிய கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா பாதிப்பினால் அடுத்த இரு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது.
கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் நகைக்கடன் என்பது தவிர்க்க முடியாத அங்கம். இதை உணர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்கும்படி கூட்டுறவுத்துறைக்கு முதலமைச்சர் ஆணையிட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.