கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பா. ம. க நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் வேகம் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், கடந்த 40 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடைமுறையில் இருந்து வந்த முதல் இரு கட்ட ஊரடங்கு நிறைவடைந்து, தளர்வுகளுடன் கூடிய மூன்றாவது ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
இது கரோனா பரவலுக்கு சாதகமாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதகமாகவும் இருக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது.சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக்கி இருக்க வேண்டும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. மத்திய அரசு கூட, அது பிரகடனப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று தான் கூறியிருக்கிறதே தவிர, கூடுதலாக கடுமையாக்கக் கூடாது என்று கூறவில்லை.
இத்தகைய சூழலில் மத்திய அரசின் உத்தரவுகளை அப்படியே கடைபிடிக்கிறோம் என்று கூறி, மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்தது போன்ற சூழலை, தற்போது மாநில அரசு ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. சென்னையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, இனியாவது ஊரடங்கைக் கடுமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
சென்னை, அதன் புறநகர் மாவட்டங்களில் கரோனா பரவல் அச்சுறுத்தல் கொழுந்துவிட்டெரியும் நெருப்பாக இருக்கும் நிலையில், நாம் விட்டில் பூச்சிகளாக இருக்கப் போகிறோமோ, விபரமானவர்களாக இருக்கப் போகிறோமா என்பதுதான் சென்னைவாசிகள் இன்றைய நிலையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். ஊரடங்கும், முழு ஊரடங்கும் இருந்த காலத்தில்தான் சென்னையில் கொத்து கொத்தாக கரோனா பரவல் ஏற்பட்டது.
இப்போதும்கூட ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கரோனா, ஒரே தெருவில் 54 பேருக்கு கரோனா என்று செய்திகள் வெளியாகிவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு காலத்திலும் நோய் பரவாமல் தடுப்பது நாம் கடைபிடிக்கப்போகும் சுயக்கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
எனவே, சென்னை, அதன் புறநகர் மாவட்ட மக்கள் இன்று முதல் அடுத்து வரும் 14 நாட்களை ஊரடங்கு தளர்வு காலமாகக் கருதாமல், தண்டனைக் காலமாக கருதி வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கூடுதல் பொறுப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். அப்போதுதான் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும்போதாவது புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்' என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தமிழர்களை தாயகம் அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - கி.வீரமணி