சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான வழக்கு வரும் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன் மூலம் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைக்கு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஈரோட்டில் பேசிய ஈபிஎஸ், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கு ஓபிஎஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் திண்டுக்கலில் உள்ள காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி நேற்று(நவ.11) தமிழ்நாடு வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருமே பிரதமரை வரவேற்பதற்காக இருந்துள்ளனர்.
அருகருகே நின்றிருந்த இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவரையும் ஒன்றாக வாருங்கள் என்று கூறி பிரதமர் மோடி தன்னுடைய வரவேற்பை பெற்றுக்கொண்டார். இந்த செயல் அதிமுக வட்டாரங்களில் மீண்டும் பேசு பொருளாக மாறிவிட்டது. அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையீடு இருப்பது என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு வரும் போது மீண்டும் மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்ப இருவரும் நின்றிருந்தனர். அப்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தனர். அபோதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் பிரதமர் மோடி, அனைவரும் ஒன்றிணையுங்கள் இரட்டை இலையில் தான் போட்டியிட வேண்டும் என்ற அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: 'கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக' - PMயிடம் CM கோரிக்கை