சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 118.9 கிலோ மீட்டர் தொலைவில், 61, 843 கோடி ரூபாய் செலவில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சிப்காட், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில், பாதாள மற்றும் உயர்மட்ட பாதை வழியாக ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல்கட்ட பணியாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. பவர் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான 8 கிலோ மீட்டர் பாதையில் சாலிகிராமம், அவுச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் சந்திப்பு, போரூர் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்கள் வழியில் வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த்தை லார்சன் அண்ட் டியூபுரோ நிறுவனம் பெற்றுள்ளது. 9 ரயில் நிலையங்கள் மற்றும் அதற்கான மேம்பாலம், ரயில் பாதை அமைக்கும் பணிக்கு1,035 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ரயில் பாதை அமைக்க ஒப்பந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த திட்டத்துக்கான ரயில்களை பெறுவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், ஓட்டுனர்கள் இல்லாமல் தானியங்கி ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில்களை இயக்கும் வகையில் ரயில்கள், சிக்னல்கள் வடிவமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தற்போது உள்ள ரயில்களில் தானியங்கி வசதிகள் இருந்தாலும் ஓட்டுநர் ஒருவர் உள்ளே அமர்ந்து கைகளால் இயக்கி, நிறுத்தி, கதவுகளை திறந்து மூடி வருகின்றனர். முதல் கட்ட திட்டத்தில் (phase 1) ஓடும் ரயிலை இரண்டாம் கட்ட திட்டத்தில் இயக்க முடியாது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரண்டாம் கட்டத்தில் சில ரயில் பெட்டிகளை குத்தகைக்கு எடுத்து, தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், ரயிலின் அன்றாட இயக்கத்தில் மெட்ரோ ரயில் அலுவலர்களின் பணி இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் செலவுகள் பெருமளவு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளது. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதும் 2023 ஆம் ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மெட்ரோ 2ஆம் கட்டப் பணி... போரூர் - வடபழனி போக்குவரத்து நெரிசல் குறையுமா?