பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2,144 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் தேர்வு நிலை ஒன்றுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னரே அறிவித்திருந்தது.
அதன்படி முதுகலை ஆசிரியர் பணி, உடற்கல்வி இயக்குனர் (நிலை ஒன்று) பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இதனையடுத்து செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், செப்டம்பர் 27ஆம் தேதி இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மூலம் காலையிலும், விலங்கியல், பொருளியல், தாவரவியல், உடற்கல்வியியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மனை அறிவியல், அரசியல் அறிவியல், இந்திய கலாசாரம் ஆகிய பாடங்களுக்கு மதியமும் தேர்வு நடைபெறுகிறது.
28ஆம் தேதி காலையில் ஆங்கிலம் பாடத்திற்கும், மாலையில் வணிகவியல், வேதியியல் பாடத்திற்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல், 29ஆம் தேதி காலையில் தமிழ் பாடத்திற்கும் மாலையில் கணித பாடத்திற்கு நடைபெறுகிறது.
இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்,தேர்வெழுதும் இடம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.