சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.டி.ஆறுமுகம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில், "வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டிக்கு இடையில் ரயில் வழித்தடத்தில் நீர்நிலை பகுதியில் ஆளில்லா லெவல் கிராசிங் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக சுரங்கப் பாதை அமைக்கப்படுவதால், ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (நவ.30) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகிய அரசு வழக்கறிஞர், பாதையின் இருபுறமும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள இடமானது அரசு புறம்போக்கு மற்றும் ரயில்வேக்கு சொந்தமானதே தவிர நீர் நிலை அல்ல எனப் பதில் மனுத்தாக்கல் செய்தார்.
நீர் நிலையானது சுரங்கப்பாதையிலிருந்து தூரத்தில் உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் ரயில்வே தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த பதில் மனுவில், "வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கள ஆய்விற்கு பிறகே சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கானது சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தொடரப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தல்: மூன்று மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு