சென்னை: சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை மாவட்டம் சிங்காநல்லூரைச் சேர்ந்த பூமிராஜ் மனு தாக்கல் செய்து உள்ளார்.
சிங்காநல்லூரைச் சேர்ந்த பூமிராஜ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது, ‘‘கடந்த மே 22 அன்று தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதேபோல சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் சுமார் 22 பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த அனைவரும் ஏழை, எளிய கூலித்தொழிலாளிகள் ஆவர்.
டாஸ்மாக் மதுபானக்கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த பார்களில் மதுபானங்களை விற்கவோ? சேமித்து வைக்கவோ சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் போலீஸார் மற்றும் கலால்துறை அதிகாரிகளின் துணையுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பார்களில் தரமற்ற மதுபான வகைகளும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா? அதில் எத்தனை சதவீதம் ஆல்கஹால் உள்ளது? மற்றும் அந்த மதுபான வகை அருந்த உகந்ததா? என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான குடவுன்கள் மற்றும் டாஸ்மாக் விற்பனை மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை சோதித்து உறுதிப்படுத்தும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதிக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுபானங்களை, அருகில் உள்ள பார்களில் வைத்து விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், என அதில் கோரியுள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வில் இன்று (மே 24) விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் சந்துக்கடைகள் மூலம் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய அனுமதி அளித்தவர்கள் யார்? தமிழகம் முழுவதும் காவல் துறையும், வருவாய்த்துறையும் இதை வேடிக்கை பார்க்கின்றனவா என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காண இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல செய்தி! உங்கள் ராசிக்கு என்ன பலன்?