சென்னை: சென்னை தீவுத் திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேரத் தெரு பந்தயமாக பார்முலா 4 கார் பந்தய போட்டி தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.
சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்க கோரி மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் சென்னை வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்த கார் பந்தயத்தை மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக கார் பந்தயம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதை டிசம்பர் 15, 16ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பந்தயத்தை நடத்துவதற்கான சாலைப் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, இன்று (டிச.11) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், கார் பந்தயத்திற்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கிறார்கள். அந்த நிதி நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியிலிருந்து ஒதுக்கப்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.
20 லட்சத்துக்கு மேல் இருந்தால் அரசு அந்த தொகையை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தனியார் நிறுவனம் தான் அரசின் நடவடிக்கையால் பயன் பெறும். அரசு வெளியில் கார் பந்தயம் நடத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அரசு ஏன் தனியார் நிறுவனம் பயன் பெறப் பந்தயம் நடத்துகிறது என்பது வியப்பாக உள்ளது.
அரசு சார்பில் செய்யப்படும் சாலை வசதிகள், பார்வை கூடங்கள், சிற்றுண்டி மையங்கள் தற்காலிகமானவை என அரசு கூறுகிறது. அதற்கு ரூபாய் 200 கோடி ஏன் செலவிடப்படுகிறது. பந்தயம் முடிந்ததும் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அரசு தரப்பில், குறிப்பிட்ட போட்டியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு நிதி ஒதுக்கி செலவு செய்கிறது. மாநில அரசு எல்லா நேரங்களிலும் லாபத்தை மையமாக வைத்து மட்டுமே செயல்பட முடியாது. சில விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும் என தெரிவித்தார்.
இதையடுத்து, கார் பந்தயம் வரையறுக்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகளில் வருமா? இல்லையா? என அரசிடம் கேள்வி எழுப்பி வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "16ஆம் தேதி முதல் வெள்ள நிவாரண டோக்கன்" - தங்கம் தென்னரசு தகவல்