சென்னை: மதமாற்றத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் மே 5ம் தேதி திரைக்கு வர உள்ள "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்துக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் உள்ள பெண்கள் காணாமல் போனதன் பின்னணியை மையமாக வைத்து "தி கேரளா ஸ்டோரி" என்ற திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மே 5ஆம் மேதி திரைக்கு வர உள்ளது.
கதையின் மையக் கருவாக காணாமல் போகும் 32 ஆயிரம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்னர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்து தீவிரவாதத்தைப் பெண்கள் பரப்புவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் "டீசர்" கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானபோது, மதச்சார்பற்ற இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வரும் மே 5ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் திடைப்படத்தை திரையிடத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மே.2) வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கேரளாவிலும் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக்கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: The Kerala Story: தேசிய கவனத்தை ஈர்த்த 'தி கேரளா ஸ்டோரி' - உண்மையை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு என அறிவிப்பு!