சென்னை:தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அதிகாலையியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபர் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்பதைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசித் தப்பியோடிய கருக்கா வினோத் என்பவரை மாம்பலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்விற்கு ஆதரவு தந்ததால் குண்டு வீசினேன்..!
இதற்கிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யவும், அலுவலகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் பாஜக தலைமை அலுவலகச் செயலாளர் சந்திரன் மூலம், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்திடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைபாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இருபிரிவின்கீழ் வழக்குப்பதிவு
அதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது மாம்பலம் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டப்பிரிவான தீயிட்டு அல்லது வெடிமருந்துப் பொருட்களால் 100 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் வெடிபொருள் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பாஜக அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு
விசாரணைக்குப்பிறகு கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவின் இருபுறத்திலும் கூடுதலாக காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:விவகாரம் முடியும்வரை மாணவர்கள் ஹிஜாபோ காவியோ அணியத்தடை: கர்நாடக உயர் நீதிமன்றம்