சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தாம்பரம் மாநகராட்சியின் 48ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்போனில் நேற்று யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரேஷன் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்றும் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியாகியிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சடைந்த கார்த்திகேயன், சேலையூர் காவல் நிலையத்தில் அந்த யூடியூப் சேனல் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், யூடியூப் சேனல் உரிமையாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகிரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை பார்த்து, தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அதோடு இதுபோன்ற செய்திகளை யூடியூபில் பதிவிட்டால், அதிக பார்வைகள் வரும் என்ற எண்ணத்தில் பதிவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ‘மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும் கட்டுமான கழிவுகளை அகற்ற வேண்டும்’ - சென்னை மாநகராட்சி உத்தரவு!