ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று (ஏப்ரல் 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ’’ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக இன்று (ஏப்ரல் 26) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இதுவரை அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டுவதில் பின்பற்றப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் கூட்டியிருப்பது ஏனென்று விளங்கவில்லை.
கரோனா காரணமாகத் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றால் இணைய வழியாகவே இந்தக் கூட்டத்தை அரசு நடத்தியிருக்கலாம். தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
தற்போது, ஸ்டெர்லைட் ஆலையில் 'ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்' என்று எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு நெருடலாகவும் உறுத்தலாகவும் உள்ளது. எனினும், அனைத்துக் கட்சிகளின் முடிவு என்கிற வகையில் அம்முடிவுக்கு உடன்படுகிற அதே வேளையில் வேறுசில கருத்துகளை அரசின் கவனத்துக்கு முன்வைக்கிறோம்.
மத்திய அரசு தமிழ்நாட்டின் ஆக்சிஜன் தேவையைக் குறைத்து மதிப்பிட்டு இருப்பதாகவும் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை நாள் ஒன்றுக்கு 450 மெட்ரிக் டன் அளவுக்கு உயரக்கூடுமென்றும், தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டின் ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் 400 மெட்ரிக் டன்தான் என்றும் இந்நிலையில் 80 மெட்ரிக் டன்னை ஆந்திரா, தெலங்கானாவுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து அனுப்புவது சரியல்ல என்றும் முதலமைச்சர் அதில் தெரிவித்திருந்தார்.
தற்போது, ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற என்ன நடவடிக்கை தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டிருக்கிறது? ஒவ்வொரு மருத்துவமனையிலும் பிஎஸ்ஏ (Pressure Swing Absorption oxygen generator) ஆக்சிஜன் ஜெனரேட்டர் வசதியின் மூலமாக வெறும் ஒன்றேகால் கோடி ரூபாயிலேயே சுமார் ஒரு மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கலாம்.
அதற்காக மத்திய அரசு 201 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 162 கட்டமைப்புகளை உருவாக்குவதாகவும் கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதில் எத்தனை கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? தமிழ்நாடு அரசு ஏன் அத்தகைய கட்டமைப்புகளை இங்கே உருவாக்கவில்லை? என்பதைத் தமழ்நாடு முதலமைச்சர் விளக்க வேண்டும்.
மத்திய அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தடுப்பூசி பற்றாக்குறை செயற்கையாக உருவாக்கப்பட்டு இப்போது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தம் விருப்பம்போல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. அதுபோலவே ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும் சரியாக திட்டமிடாமல் ஒரு செயற்கையான பற்றாக்குறையை நாட்டு மக்கள் மீது திணித்து அதைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு திட்டமிடுகிறார்களோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் “இக்கட்டான நேரத்தில் இலவசமாக ஆக்சிஜனை கொடுத்தோம், பேரிடர் காலத்தில் உதவினோம்” என்பதைக் காரணம் காட்டி நாளைக்கு இந்த ஆலையை நிரந்தரமாகத் திறப்பதற்கு அனுமதி கோரலாம். அவ்வாறு கேட்டால் அதை நீதிமன்றம்கூட பரிசீலிக்கக்கூடிய சூழல் உருவாகும். இதையெல்லாம் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டதா என்பது தெரியவில்லை.
பொதுமக்களின் உயிரைக் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முரணான முடிவுக்கு ஒவ்வாமையுடன் ஏற்கும் அதே வேளையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்; அதை நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்’ என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியில் கோளாறு: ஆந்திராவில் 2 பேர் உயிரிழப்பு!