சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நீதி நிர்வாகம், சிறைச் சாலை மற்றும் சட்டத்துறை மானிய கோரிக்கை மேல் விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்திற்குப் பிறகு நேரமில்லா நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, “கரோனா நோய் தடுப்பு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுவரை நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை மேற்கொள்ள சிறப்புக் குழு அமைத்து துரிதமாக செயல்பட்டு வருகிறது. மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, ஆன்மீக தலங்கள், பெரும் ஜவுளி கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சட்டப்பேரவை நடந்து வருவதால் தலைமை செயலகத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை நடைபெற்றால்தான், சூழ்நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். மக்கள் பணி செய்யத்தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் எனவே சட்டப்பேரவையை ஒத்தி வைக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'மருத்துவச் சான்றுதழ் இல்லையென்றால் அனுமதிக்கமாட்டோம்' - ராணுவ வீரரை தடுத்து நிறுத்திய கிராமத்தினர்