சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் வசித்து வரும் 259 குடும்பங்கள் அரசு நிலத்தில் இருப்பதாகவும், இவர்கள் இருக்கும் பகுதி கல்வாய்க்கு அருகில் இருப்பதாகவும், நீர்நிலைபகுதியை ஆக்கரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2008 ஆண்டு ராஜூ ராய் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்
இந்த வழக்கானது பல்வேறுகட்ட விசாரணைக்கு பின் ஒரு மாதத்திற்கு முன்பு விசாரணைக்கு வந்த போது ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை அப்புறப்படுத்திவிட்டு, உங்களுக்கு வேறு இடத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளது என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீட்டை இடிக்க வந்தபோது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மின்சார ரயில் செல்லும் பாதையில் இளைஞர்கள் ஏறி மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக்கொண்டு குதிப்பதாக மிரட்டினர்.
முதலமைச்சர் வர வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வர வேண்டும் என கூறினர். காவல்துறை அதிகாரிகள் வெளியே போக வேண்டும் எனவும் மின்சார ரயில் பாதையில் ஏறிக்கொண்டு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற காவல்துறை, அவர்களை கீழே இறங்கி வர கூறி பேச்சுவார்த்தை நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். அதன்படி அவர்கள் கீழே இறங்கிவந்தனர்

இளங்கோ நகர் தெருவில் வசிக்கும் ஐந்து நபர்களை அழைத்து பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டம் தொடர்கிறது.வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லை என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பெண் கூறுகையில், "நாங்கள் இங்கே நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். தனிநபர் சுயநலத்திற்காக ஒரு ஊரையே காலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மக்களை துன்புறுத்துகின்றனர். எங்களுக்கு பட்டா ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில் அப்புறப்படுத்துவது நியாயமில்லை.
நாங்கள் வீட்டு வரி, மின்சார வரி, தண்ணீர் வரி போன்றவைகளை இந்த மாதம் வரை செலுத்தியுள்ளோம். அனைத்து சலுகைகளையும் பெறுகின்றோம், அப்புறம் எப்படி இது அரசு நிலம் ஆகும்?. எங்கள்ளுடைய வாழ்நாள் உழைப்பு இந்த இடத்தில்தான் போட்டுள்ளோம். இப்போது எப்படி காலி செய்ய முடியும்?. முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:ஆவடி எம்ஜிஆர் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்... பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்