கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்கள் மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத் வரப்படுகின்றனா். கடந்த மாதம் 31ஆம் தேதி வரை அவர்கள் அனைவரையும் மாநில அரசு தனி பேருந்துகள் மூலம் அழைத்துவந்து, அரசு முகாம்கள், ஹோட்டல்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தியது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதையடுத்தும் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து மக்கள் முகாம்களில் கட்டாய தனிமைப்படுத்தும் முறையையும் அரசு நீக்கியது.
எனவே பயணிகள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தனியாா் வேன்கள், காா்கள் மூலம் அவா்களுடைய சொந்த ஊா்களுக்கு சென்றுவருகின்றனா். அவ்வாறு செல்பவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்ததை அடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் இரவு நேரங்களில் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு வருவோரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல நான்கு பேருந்துகளை இயக்கியது.
அவற்றில் இரண்டு பேருந்துகள் சென்னை விமானநிலையத்திலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரையும், ஒரு பேருந்து சேலம், ஈரோடு வழியாக கோவைக்கும், மற்றோரு பேருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம் வரையும் செல்கின்றன. 30 பயணிகள் வரை ஏற்றிச் செல்லப்படும் இந்தப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தப் பேருந்துகள் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யப்படாததால், பயணிகள் பலருக்கு இது குறித்த தகவல் தெரியாமல் வாடகை வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.
மேலும் இந்த அரசுப் பேருந்துகளில் சென்றால், தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கிவிடுவார்கள் என்பதாலும், இதனால் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மீண்டும் மற்றொரு வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதாலும் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கு ஆா்வம் காட்டவில்லை.
இதனால் அரசு பேருந்துகள் மிகவும் குறைந்த பயணிகளுடனே இயக்கப்படுகின்றன. நேற்று இரவு அமெரிக்கா, குவைத், தமாம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து திரும்பிய 423 பேரில் குறைந்த அளவு பயணிகளே போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்து பயணத்தை தேர்வு செய்துள்ளனர்.