சென்னை: நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக மெரினா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பேரிகார்டு அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் அதிகமாக நடந்துவந்த பைக் ரேஸ், பைக் சாகசங்கள் தற்போது குறைந்து இருந்தது.
இந்நிலையில் இரவு நேரங்களில் ரம்ஜான் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பும் இளைஞர்கள், சிறுவர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பைக் ரேசை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பைக் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டதாக 33 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
மேளும் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய 33 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டுதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 27வது நோன்பு நாளை இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இதனால் பிரதான மசூதிகளில் இரவு நேரத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை முடித்த பின்பு இளைஞர்கள் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் சென்று ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சென்னையில் நேற்றிரவு போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பிரதான சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதேபோல தொழுகையை முடித்துவிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு ஆலந்தூர் சப்வே அருகே இரண்டு 16 வயது இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக தாம்பரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது பிளாட்பாரத்தின் அருகே இருந்த கற்கள் மீது இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் வாகனம் நிலை தடுமாறி சிறுவர்கள் கீழே விழுந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வாகனத்தை ஒட்டி வந்த ஆலந்தூரை சேர்ந்த 16 வயது சிறுவனின் தலை மெட்ரோ பில்லரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு சிறுவன் இரண்டு கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடற்கூராய்விற்காக உயிரிழந்த சிறுவன் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மௌன்ட் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஜெய்பீம்' பட பாணியில் மீண்டும் ஓர் கொடூரம்.. கண்ணீர் வடிக்கும் இருளர் இன மக்கள்!