சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், புதன்கிழமை இரவோடு முழு ஊரடங்கு முடிந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு முன்பு இருந்தபடி ஊரடங்கு தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
மேலும், அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு ஏதுவாக அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் ஏப்ரல் 30ஆம் தேதி மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும் மே 1ஆம் தேதி முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் அதிதீவிரமாகவும் பரவுவதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க அவசரம் காட்டாமல் நிதானமாக பொறுமை காத்து, தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசங்கள் அணிந்து கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள ராஜாஜி சாலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க திரண்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று மட்டும் காலை 6 மணி முதல் 5 மணி வரை அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் திறந்திருப்பதால் பொதுமக்கள் தகுந்த இடைவெளி விட்டு பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: பல்லடம் பகுதி மக்களுக்கு நிவாரணம்: முற்றுகையை அடுத்து எம்.எல்.ஏ நடவடிக்கை!