சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் பல இடங்களில் தற்போது வரை மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாமலும், வடிகால் இணைப்புகள் வழங்காமலும் இருந்து வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிகால் பணியானது 30 - 60 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. ஆகையால் சென்னையில் எதிர்வரும் பருவமழை காலத்தில், மழைநீர் தேங்காத வண்ணம் எவ்வாறு மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
அதாவது சென்னையில் என்னதான் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இருந்தாலும், 150க்கும் மேற்பட்ட இடங்களில் இணைப்புகள் இல்லாததால், வரும் வடகிழக்கு பருவமழையில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2021 வெள்ள பாதிப்பிற்குப் பின், தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்த, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.
மேலும் பேரிடர் மீட்பு குழுவினர் பரிந்துரைப்படி, சென்னையில் பல்வேறு இடங்களில் குறுகிய காலம், நீண்ட காலம் என்ற அடிப்படையில் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மழை பெய்த இடத்தில் எல்லாம், தற்போது தண்ணீர் தேங்காத வண்ணம் மழை நீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னை மாநகரத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளான கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்கவும், தூர்வாரவும், தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு சுமார் ரூ.434.22 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல, நெடுஞ்சாலைத்துறைக்கு, ரூ.93.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மழைநீர் வடிகாலில் இருந்து, அருகில் இருக்கும் நீர்நிலைகளுக்கு செல்லும்படி மழைநீர் வடிகாலானது அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், சில முக்கிய தெருவில் இருந்து பிரதான சாலையில் உள்ள நீர்நிலைக்கு செல்லும் வடிகாலுக்கு, அந்த தெருவில் இருந்து வரும் இணைப்பு பணிகள் சற்று தாமதமாகி வருகிறது. தற்போது இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கினால், பிரதான மழைநீர் வடிகாலுக்கு மழைநீர் செல்லாமல், இணைப்பு இல்லாத பகுதியிலேயே மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, பல்வேறு இடங்களில் பல்வேறு திட்டங்களில் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், திருவிக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்து 220 கோடி மதிப்பில் 690 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதில், தற்போது 84% சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
மேலும், செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்ட இடங்களான தண்டையார் பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையார், சோழிங்கநல்லூர், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் எல்லாம் 59 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்கு 20 கிலோ மீட்டர் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பருவ மழை தொடங்கவுள்ளதால், பணிகள் எப்போது முடிக்கப்படும்? வெள்ள அபாயம் எப்படி இருக்கும்? என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியா, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று தெரிவித்து வந்த நிலையில், தற்போது செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கிடையில் சென்னையில் அவ்வப்போது மழையானது பெய்து வருகிறது. மேலும் சில மழைநீர் வடிகாலில் சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம் ஏற்படுகிறது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் கூறியதாவது, "வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைக் கழிவுகளை அவ்வப்போது அகற்றி, மழைநீர் எளிதில் செல்லும் வகையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1991.07 கோடி மதிப்பில் 786.13 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதியின் கீழ் 38.97 கிலோ மீட்டர் நீளத்திற்கும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 58 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ் சுமார் 104 கிலோ மீட்டர் நிளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல பெருங்குடி, மடிப்பாக்கம், ராம் நகர், குபேரன் நகர், மணப்பாக்கம், முகலிவாக்கம், இராமாபுரம், வளசரவாக்கம், அம்பத்தூர், மணலி உள்ளிட்ட இடங்களில் சென்னை குடிநீர் வாரியம், மின்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மழைநீர் வடிகால் பணிகள் என்பது, 3-கட்டங்களாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சார்ந்து, எந்த இடத்தில் தேவை என்பதை அறிந்து நடைபெற்று வருகிறது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத ஒப்பந்ததாரர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்ற முறை நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாகவும், விரைந்தும் முடித்திட வேண்டும். மேலும், பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காமல் காலதாமதம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3-கட்டங்களாக நடைபெறும் பணிகள் குறிப்பிட்ட நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மழை தொடங்கும் முன், மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் பணியானது நிறைவடையும்" என தெரிவித்துள்ளார்.