சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைக் கடந்த 2023 டிசம்பர் 4ஆம் தேதி அன்று மிக்ஜாம் புயல் (MICHAUNG) உருவாகி கடந்த டிச.5 ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தவர்களை மீட்டெடுக்கவும் உதவியர்கள் தான் மீனவ மக்கள். ஆனால், தற்போது மீனவர்களாகிய தங்களுக்கு உதவ தான் யாரும் முன் வரவில்லை என மீனவர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
வட சென்னை எண்ணூர் பகுதிக்குட்பட்ட எண்ணூர் குப்பம், தாளம் குப்பம் ஆகிய பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் என்பதே மீன்பிடித் தொழில் மட்டுமே. அதிலும், இந்த எண்ணூர் பகுதி என்பது கொசஸ்தலை (கொற்றலை) ஆறும் கடற்கரையும் இணையும் முகத்துவாரம் என்பதால், மீன்களுடைய வரத்து மற்றும் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இப்படி இந்த கடல் வளங்களை மட்டுமே நம்பி தங்களின் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கேள்விக்குறியாகி நிற்பது தான் வேதனை அளிக்கிறது.
எண்ணெய் கசிவு: எண்ணூர் பகுதி என்பது பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி, இதில் கொசஸ்தலை ஆற்றிற்கு அருகில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்திலிருந்து அவ்வப்போது எண்ணெய் கழிவுகள் திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், இதனால் பல உடல் உபாதைகள் தங்களுக்கு ஏற்படுவதாகவும் எண்ணூர் குப்பம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஆலையிலிருந்து வெளிவரும் எண்ணெய் கழிவு மட்டுமல்லாது சாம்பல் மற்றும் சூடான நீர் அதிகளவு ஆற்றில் கலப்பதால் மீன்கள் மட்டுமல்லாது பல கடல் உயிரினங்கள் அவ்வப்போது இறந்து கரை ஒதுங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகளை தற்போது வரை அகற்றாமல் சிபிசிஎல் நிறுவனமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றுவது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை சிபிசிஎல் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
அதே வேளையில், ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தும் கூட கடந்த 15 நாட்களுக்கு மேலாகியும் 50% பணிகள் கூட முடிவடையவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, அரசு அதிகாரிகள் முதல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பார்வையிட்டு செல்வதாகவும், அவர்கள் வரும் போது மட்டும் தான் எண்ணெய் கழிவுகளை அகற்றப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் சென்ற பிறகு, இந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் யாரும் அவர்களுடைய பணிகளை செய்வதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் குற்றச்சாட்டு: மீனவர்களாகிய நாங்கள் தான் எங்களுடைய சொந்த ஃபைபர் படகுகளை பயன்படுத்தியும், தங்களால் முடிந்த உபகரணங்களை வைத்து தான் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதாகவும் தெரிவிக்கின்றார் எண்ணூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேஷ்.
மேலும், எங்களுக்கென எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் கொடுக்கபடவில்லை. அப்படியே அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் சொல்வதைக் கூட அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை என கூறுகிறார். குறிப்பாக கடற்கரை ஓரமாக கடற்கரை மணலில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடலின் முகத்துவாரத்தில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற அப்படி எந்தவித இயந்திரமோ பயன்படுத்தபடவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கடற்கரை மணலில் 4 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்ட பிறகும் கூட எண்ணெய் கழிவின் சுவடு இருக்கிறது. அப்படியென்றால், ஆற்று நீரின் நிலையை நினைத்து பாருங்கள் இங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் கடல் வாழ் உயிரினங்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். இதை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் எங்களின் நிலையை நினைத்து பாருங்கள் என கண்ணீர் மல்க கூறுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் பாரதி, "இயற்கை பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்ற அரசிடம் பல உபகரணங்கள் இருக்கும் போது, இது போன்ற எண்ணெய் கழிவுகள் நீரில் கலந்தால் அதை அகற்றுவதற்கான நவீன மயமாக்கப்பட்ட உபகரணங்கள் தற்போது வரை அரசிடம் இல்லை என குற்றம் சாட்டுகிறார்.
தற்போது, மீனவர்களே இந்தக் கழிவுகளை அகற்றும் பணியில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வனத்துறை சார்பாக எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறையும் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை.
அரசு செயல்படவில்லை: இந்த எண்ணெய் கழிவால் சேதமடைந்த படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை மீண்டும் பயன்படுத்த முடியாது. அப்படியென்றால் அதற்கும் அரசு நிவாரணம் வழங்குமா என இதுவரை கூறவில்லை. இப்படி எல்லாவற்றிற்கும் அரசு வேடிக்கை மட்டும் தான் பார்க்கும் என்றால் கடைக்கோடியில் இருப்பவர்கள் நாங்கள் என்ன செய்வது? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக, இந்த எண்ணெய் கழிவின் கசிவினால் சென்னை தொடங்கி பழவேற்காடு வரை கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்பவர்களை மட்டும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
வாழ்வாதாரத்தை இழந்த மீனவ மக்கள்: எங்களிடம் சில்லரை வியாபாரத்திற்கு மீன்களை வாங்கி விற்கும் பெண்களையும் இந்த அரசு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்கள் மட்டும் தான் குடும்பத்தின் பணம் ஈட்டும் நபராக இருப்பார். ஆனால் அவர்களும் இந்த எண்ணெய் கழிவின் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இப்படி எல்லா வகையிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு என்ன நிவாரணத்தை இந்த அரசு வழங்கப் போகிறது என கேள்வி எழுப்பினார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் வட சென்னையில் அனல் மின் நிலையம், அடுத்ததாக பெட்ரோலிய நிறுவனங்கள் வருகிறது என்றவுடன், எங்கள் மீனவ மக்களுக்கு உதவியாக வேலை கிடைக்கும். எங்களின் வாழ்க்கை தரம் உயரும் என எண்ணிணோம். ஆனால், நிலைமை அப்படியே தலைகீழாக மாறி எங்களுக்கு வேலையும் இல்லை. இந்த நிறுவனங்களால் தினம் தினம் அவதிக்குள்ளாக்கப் படுகிறோம்" என வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷனண், "கடலின் முகத்துவாரப் பகுதியில் பெரிய அளவில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள எண்ணெய் படலங்கள் மூன்று நாட்களுக்குள் அகற்றப்படும். எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் பிரத்தியேகமாக நான்கு அணிகள் ஈடுபட்டுள்ளன. எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் 110 படகுகளும், 440 பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, கழிவுகளை அகற்றும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரையோரம் மண் குப்பையில் படிந்திருந்த எண்ணெய் படலங்கள் 90 டன் அளவில் அகற்றப்பட்டுள்ளது. அதே போல எண்ணூர்குப்பம், தாளம்குப்பம், நெடுங்குப்பம் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2,115 பேர் பயனடைந்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அரிசி அடங்கிய 11 ஆயிரம் பைகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய 6,000 பைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அந்த பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 112 பேர் வீடுகளில் படிந்துள்ள கழிவு கறைகள் அகற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள 230 வீடுகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இவை அனைத்தும் மாநகராட்சி சார்பாக எடுத்துள்ள பணிகள். மேலும், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் இதர பாதிப்புகள் குறித்து அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விரைவில் அறிக்கையைப் பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்மாவட்ட கனமழை எதிரொலி.. அண்ணா பல்கலைக்கழகத்தால் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது?