சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்த டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் டெங்கு பாதித்தவர்கள் குறித்த விவரத்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பொது சுகாதாரத்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு டயர், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றிட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் பரவும் அபாயம் உள்ள இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்காள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டில் இதுவரை 4 ஆயிரத்து 227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 3 நபர்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவத்துறையின் இணை இயக்குநர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பரவலாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
அதில் டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. டெங்கு காய்ச்சல் வந்தால் காய்ச்சல், தலைவலி, மூட்டுகளில் வலி, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பொது சுகாதாரச் சட்டத்தின் படி டெங்கு காய்ச்சல், பொது சுகாதார சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட நோய்.
எனவே டெங்கு காய்ச்சல் குறித்த தகவல்களை, பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் இருந்து தகவல்களை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலருக்கு அளிக்க வேண்டும். மேலும், கொசு உற்பத்தியாவதை தடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும். அதனை ஓரிரு நாள்களில் சரி செய்யவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டுத் தங்க கட்டிகள் குறைந்த விலைக்கு விற்பனை.. மோசடி கும்பல் சிக்கியது எப்படி?