நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய அறிகுறி உள்ளவர்களுக்கு பிசிஆர் சோதனைமுறை பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு நமது ஈடிவி பாரத்திடம்,
"தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி உள்பட 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பிசிஆர் சோதனை செய்யப்படவுள்ளன. ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி பிசிஆர் சோதனை செய்வதற்குத் தேவையான உபகரணங்கள், ஆய்வகப் பணியாளர்களுக்குத் தனி அறைகள் என அனைத்து வசதிகளும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
வேலூர், திருவண்ணாமலை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரைவில் பரிசோதனை தொடங்கப்படவுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உயர்தர உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
கரோனா வைரசால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிய சளி, இருமல், காய்ச்சல், ஏற்கனவே வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள், வெளிநாடு, வெளி மாநிலம் சென்றுவந்தவர்கள், அவர்களுடன் தொடர்புள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் யாராவது அறிகுறியுடன் வந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்கிறோம்.
தனியார் ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி அனுமதி அளிக்கின்றனர். அனைத்து ஆய்வகங்களிலும் கணினி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் எந்தவித தவறும் நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: கர்ப்பிணிகளும் கரோனா தொற்றும் - மகப்பேறு நிபுணரின் சிறப்புக் கட்டுரை